குடிசைப்பகுதி மக்களுக்கு நோயெதிர்ப்பு மாத்திரை: சேலம் மாநகராட்சி சுறுசுறுப்பு!

குடிசைப்பகுதி மக்களுக்கு நோயெதிர்ப்பு மாத்திரை: சேலம் மாநகராட்சி சுறுசுறுப்பு!
X
சேலம் மாநகராட்சியில், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் நோயெதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், மாநகராட்சி உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது .

இதில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசியதாவது: சேலம் மாநகராட்சியில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மண்டலம் மற்றும் வார்டு அளவில் நகராட்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வூட்டும் பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன .

கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது 879 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அருகிலுள்ள குடும்பத்தார்கள் என 2 ஆயிரத்து 988 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், 50 பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சுகாதார பணிகள் மற்றும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகின்றன. வாய்க்காபட்டறை அரசு உயர்நிலை பள்ளி, தொங்கும் பூங்கா அரங்கம் ஆகியவை தற்காலிக சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நோய்தொற்று அதிகரித்து வரும் சூழலில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பத்திற்குத் தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டல அளவில் குழுக்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் 13 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த குழு மாநகராட்சி முழுவதும் மேற்பார்வை செய்ய உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில், குடிசைவாழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உள்ள அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகள், ஜிங் மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!