ஆடிமாத பிறப்பு: சேலம் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம்
சேலம் சின்னக்கடை வீதியில், பூக்களை வாங்க குவிந்த பொதுமக்கள்.
தமிழ் மாதமான ஆடி நாளை பிறக்கிறது; சுபமுகூர்த்த நாளாகவும் உள்ளது. இதனால், சேலத்தில் பொதுமக்கள் பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வ.ஊ.சி. பூ மார்க்கெட் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட பிறகும், இரு சங்கங்களுக்கு இடையே நிலவும் பிரச்னை காரணமாக இதுவரை செயல்படவில்லை.
இதன் காரணமாக, வியாபாரிகள் சாலையோரங்களில் கடைகள் அமைத்து பூ விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சின்ன கடைவீதி, பெரியார் தெரு, மார்க்கெட் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், அந்த சாலைகளில் கடும் வாகன நெரிசலும் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
காவல்துறையினரோ, மாநகராட்சி ஊழியர்களோ கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீர்செய்யவும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், மக்களும் பெரும்பாலும் விதிகளை கடைபிடிக்காமல் செல்கின்றனர். இதனால், நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பூக்கள் விலை உயர்வு
இதேவேளையில், ஆடிமாத பிறப்பையொட்டி பூக்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று ரூபாய் 400 க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டுமல்லி பூ, தரத்திற்கேற்ப் ஒரு கிலோ ரூபாய் 600 ஆக அதிகரித்துள்ளது. ரூபாய் 80 ஆக இருந்த சாமந்தி ரூபாய் 150 க்கும், ரூபாய் 100 ஆக இருந்த அரளி ரூபாய் 180 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நாளை பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால் இன்றைய தினமே பூக்களை வாங்கி செல்ல பலரும் ஆர்வம் காட்டினர். கூட்ட நெரிசலை குறைக்க, வழக்கம் போல், வ.ஊ.சி. மார்க்கெட் மீண்டும் வழக்கம்போல் திறக்கப்பட வேண்டும் என்பதே வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu