அரசு அறிவித்துள்ள வழிமுறையை பின்பற்றினால் ஊரடங்கு வராது - முதல்வர் பேட்டி
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி இன்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது,
தமிழ்நாட்டில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 95.31 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்திற்கு இதுவரை 54 லட்சத்து 85 ஆயிரத்து 760 தடுப்பூசிகள் வந்துள்ளன.
தமிழகத்தில் 34 லட்சத்து 87,036 பேர் இதுவரை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர். சேலத்தில் 1 லட்சத்து 94,461 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது சுமார் 20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.
போதுமான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கரோனா சிகிச்சை மருந்துகள், உபகரணங்கள் முகக்கவசம் போதுமான அளவு உள்ளது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளையும், அரசாங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும்.
தற்போது கொரானா தொற்று வேகமாக அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசாங்கம் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
முழு லாக்டவுன் வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர், வர வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர்,
அரசு அறிவித்துள்ள வழிமுறையை மக்கள் முழுமையாக பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது. தொற்றின் வேகம் அதிகரித்தால், மருத்துவ நிபுணர்களின் அறிவுரையை பெற்று அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu