அண்ணா பூங்காவில் அலைமோதிய கூட்டம்: கொரோனா பரவும் அபாயம்
சேலம் மாநகரில் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சம் என்பது சேலம் அண்ணா பூங்கா, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா என்று ஒரு சில இடங்கள் தான் உள்ளன. அதிலும், மாலை பொழுதில் தொடங்கி இரவு வரை பொழுது போக்க வேண்டும் என்றால் அண்ணா பூங்காவுக்கு தான் மக்கள் வர வேண்டும்.
தற்போது இந்த பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு, இசை நடன நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இந்த பூங்காவிற்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குவிந்தனர்.
இதனால் பூங்கா பகுதியில் பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த வழியின்றி சேலம்-ஓமலூர் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தினர். இதனால் சாலையில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பூங்காவிற்கு வந்த பொதுமக்கள் பலர் முககவசம் அணியவில்லை. இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முக கவசம் அணியாதவர்களுக்கு அரசு அதிகாரிகள் அபராதம் விதித்து வரும் நிலையில், அண்ணா பூங்கா போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .
மேலும் பொதுமக்களும் கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிவதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும். மேலும் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த உரிய இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu