சேலம்: வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - 4 பொறியாளர்கள் மீது வழக்கு
தமிழகத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு, 2 லட்சத்து10 ஆயிரம் ரூபாய் முழு மானியமாக தவணை முறையில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வீடு கட்டும் பணிகள் குறித்து பொறியாளர்களை கொண்டு காண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சேலத்தில் 2017-18 வரையில் ஏற்கனவே கான்கிரீட் வீடு உள்ளவர்களுக்கும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 14 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் தாமாக முன்வந்து சேலம் மாவட்ட குடிசை மாற்று வாரிய செயற் பொறியாளர் ரவிக்குமார் ,உதவி செயற்பொறியாளர் ஜெயந்திமாலா, உதவி பொறியாளர்கள் சரவணன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது, 6 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அதிகாரிகளே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu