அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பாஜக தலைவர் அண்ணாமலை பளிச் பதில்
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ், பாஜக மாநில பொருளாளராக இருந்தார். அவர், 8 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு 8-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி, சேலத்தில் இன்று நடைபெற்றது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, இதில் கலந்து கொண்டு, ஆடிட்டர் ரமேஷ் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு 8 ஆண்டுகளாகியும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக தடையாணை பெறப்பட்டுள்ளது. இந்த தடையாணையை நீக்கும் வகையில், மத்திய சட்டத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுப்பேன்.
வரும் டிசம்பர் 31-ந்தேதிக்குள் நாடு முழுவதும் அனைத்து பொதுமக்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 66 கோடி தடுப்பூசி வாங்குவதற்காக ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும்.
திமுக அரசு மீதான விமர்சனத்தை 6 மாதத்திற்கு பிறகே தெரிவிக்க முடியும். அதேசமயம் ஆட்சியாளர்கள் தவறு செய்தால் நிச்சயம் தட்டிக் கேட்போம். நீட் தேர்வு நடைபெறாது என உறுதி கூறிய திமுக, தற்போது மாறி மாறி கூறுவது சரியல்ல. எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வு யாருக்கும் எதிரானது இல்லை. நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் மருத்துவம் பயிலும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடும், இதற்கு உதவியாக இருக்கும்.
பெட்ரோல்- டீசலுக்கு விலை குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. இது நாணயமான அரசியல் இல்லை. பாரதிய ஜனதாக் கட்சியை மதவாத சக்தி என குறிப்பிடுவது சரியல்ல. மத்திய பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே, சச்சார் கமிட்டியின் பரிந்துரையின் படி, சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களை கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதிமுக தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடர்வதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எங்கள் அகில இந்தியத் தலைமை இதுகுறித்து அறிவிக்கும் .
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது தமிழக பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு. இதனை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்தக்கோரி, டெல்லி சென்ற அனைத்துக்கட்சி குழுவில் நாங்களும் இடம் பெற்றிருந்தோம். தமிழகம் மற்றும் தமிழர் நலனில் பாஜகவை யாரும் பிரித்து பார்க்க்கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu