சேலம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் மாயம்.
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் அளித்து வருகிறார்கள்.
தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து இந்த மருந்தை வாங்கிச் செல்கின்றனர். இதற்கிடையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகள் ரூ. 15,000 முதல் 30,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொரோனோ நோயாளிகளுக்காக 900 ரெம்டெசிவர் மருந்துகள் நேற்று வந்த நிலையில் இன்று கொரோனோ நோயாளிக்கு பயன்படுத்த கொரோனோ வார்டுக்கு எடுத்துவரப்பட்ட ரெம்டெசிவர் மருந்து பாட்டில்களில் 29 ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி மருத்துவர்கள், மருந்து கையாளும் அலுவலர்களிடம் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்திற்கு தட்டுபாடு நிலவி வரும் நிலையில் அரசு மருத்துவமனையிலேயே மருந்துகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu