புதுச்சேரி போல் தமிழகத்திலும் நடக்க வாய்ப்பு !திருமாவளவன்
புதுச்சேரியில் இன்று நடந்தது போல் தமிழ்நாட்டிலும் எதிர்காலத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
யூஏபிஏ சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், யூஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாலன் சீனிவாசன், சித்தானந்தன், செல்வராஜ் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்த் தேச மக்கள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட இடது சாரி அமைப்பினர் பலர் கலந்து கொண்டு யூஏபிஏ சட்டத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறும்போது,புதுச்சேரியில் நடந்திருக்கும் ஆட்சி கவிழ்ப்பு ஒரு ஜனநாயகப் படுகொலை. அநாகரிகமான, அருவருப்பான ஒரு அரசியல் அரங்கேற்றம். இந்த போக்கு நாட்டுக்கு நல்லது அல்ல. புதுச்சேரியில் நடந்திருப்பது ஒரு ஒத்திகையே, தமிழ்நாட்டில் இதை விரிவுபடுத்த வாய்ப்பிருக்கிறது என்ற அவர் கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அரங்கேற்றிய அநாகரீகத்தை புதுச்சேரியிலும் அரங்கேற்றி இருக்கிறார்கள். இதை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும் என்றார்.
அதிமுகவுக்கு எதிராக ஒரு கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. 10 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அடிப்படை வசதிகளைக் கூட அவர்களால் செய்து தர இயலவில்லை என்பதுதான் உண்மை. திமுக அறிவித்து இருக்கின்ற செயல்திட்டங்களை முன்கூட்டியே நாங்கள் செயல்படுத்துகிறோம் என பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் செய்து வருகிறார். இந்த திடீர் அறிவிப்புகள் அதிமுகவிற்கு சாதகமாக என்றும் அமையாது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu