உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்ற சிறுமி

பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி சேலத்தில் 13 கிலோ மீட்டர் தூரம் இடைநில்லா ஓட்டம் மேற்கொண்ட 8 வயது சிறுமி உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றார்.

கோவிட்- 19 விழிப்புணர்வு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி சேலத்தில் 3 ம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமியான பிரதா, 13 கி.மீ தொலைவு இடைநில்லா ஓட்டத்தை மேற்கொண்டார். சிறுமியின் இந்த சாதனை ஓட்டத்தை மாநகர காவல்துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். சேலம் அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து துவங்கிய சாதனை ஒட்டம் அஸ்தம்பட்டி, 5 ரோடு வழியாக சென்று காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது.

இதில் 13 கி.மீ தொலைவை 1.16 மணி நேரத்தில் சிறுமி கடந்தார். சிறுமியின் இந்த முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து நோபுல் புக் ஆஃப் வேர்ல்டு ரெகார்ட்ஸ் அதற்கான கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறுமியை பாராட்டினர். உலக அளவில் 8 வயதில் 13 கிலோ மீட்டர் தொலைவு இடைநில்லா ஓட்டம் மேற்கொண்டு உலக சாதனையாளர் புத்தகத்தில் ஒரு சிறுமி இடம் பிடித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story