சேலம் மாவட்டத்தில் 478 பேருக்கு கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 54 ஆயிரத்து 543 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 411 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 478 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சேலம் மாநகராட்சி பகுதிகளில் 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆத்தூரில் 32 பேர், ஓமலூரில் 30 பேர், காடையாம்பட்டியில் 25 பேர், சங்ககிரியில் 20 பேர், நங்கவள்ளியில் 17 பேர், மேச்சேரியில் 14 பேர், சேலம் ஒன்றியத்தில் 12 பேர், தாரமங்கலம், வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 10 பேர், மேட்டூரில் 9 பேர், எடப்பாடி, கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 7 பேர் பாதிக்கப்பட்டனர்.
மகுடஞ்சாவாடி, தலைவாசல், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், ஏற்காட்டில் 4 பேர், கொளத்தூர், கொங்கணாபுரம், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், நரசிங்கபுரத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 135 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 2 ஆயிரத்து 886 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலத்தை சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் சேலத்தை சேர்ந்த 63 வயதுடைய முதியவர் ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானார்.
சேலம் மாவட்டத்தில் 71 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu