சேலம் மாவட்டத்தில் 30,000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்: கே.என்.நேரு

சேலம் மாவட்டத்தில் 30,000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்:  கே.என்.நேரு
X

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நாளை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு.

சேலம் மாவட்டத்தில் 30,000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி யில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரே இடத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ரூ.261 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

மேலும் 12 அரசு துறைகள் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 38.52 கோடி மதிப்பிலான 83 திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். ஆறு அரசு துறைகள் சார்பில் 54 கோடி ரூபாய் மதிப்பிலான 60 பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ரிங் ரோடு அமைப்பது, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, ஐடி பூங்கா செயல்பாடுகள், பனமரத்துப்பட்டி ஏரி சீரமைப்பு உள்ளிட்ட பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

உடனடியாக நிறைவேற்ற வாய்ப்புள்ள திட்டங்கள் குறித்தும் சேலத்திற்கு புதிய திட்டங்கள் தொடர்பாகவும் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அரசு நலத்திட்ட உதவி உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின், மறைந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா படத்திறப்பு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!