லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வரவேற்பு: பாஜக வேலூர் இப்ராஹிம்
செய்தியாளர்களை சந்தித்த பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்.
சேலம் மாநகர் மாவட்ட பிஜேபி சிறுபான்மை பிரிவு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்துகொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிற மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவை முழுமையாக வரவேற்கிறோம். இதன் மூலம் மாணவி படுகொலை தொடர்பான உண்மைகள் வெளிவரும் என நம்புகிறோம். மன ரீதியாக நெருக்கடி கொடுத்து மதமாற்றம் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒன்றாக மாற்ற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. மதம் என்பது விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதை அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக யாரும் நடந்து கொள்ளக் கூடாது.
உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலாக இருந்தாலும் தேர்தல் வெற்றியை குறிக்கோளாகக் கொள்ளாமல் தேசத்தின் வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி இயங்கி வருகிறது. மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்காக பிஜேபி முயற்சி செய்வதாகவும் மதத்தை திணித்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்து அபாண்டமானது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
கடந்த காலங்களில் கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்ட போதும் கோவில் தெய்வங்கள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசியபோதும் எந்த கருத்தும் தெரிவிக்காத முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது மத நம்பிக்கை மற்றும் மத நல்லிணக்கத்தை பேசுவது சரியாக இருக்காது என்று பிஜேபி தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu