தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தல்
அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சுனில் மைத்ரா அரங்கில் இன்று நடைபெற்ற அரசு ஊழியர்கள் மாநாடு.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14வது சேலம் மாவட்ட மாநாடு அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சுனில் மைத்ரா அரங்கில் இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் முருகப்பெருமாள் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சங்கத்தின் மாநில துணை தலைவர் சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதிய முறைகளை ரத்து செய்து அனைவருக்கும் காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில துணை தலைவர் சீனிவாசன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் சுமார் 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், 4 லட்சம் காலி பணியிடங்களை அரசு விரைந்து நிரப்ப வேண்டும் என்றார்.
மேலும் திமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றி தருவதாக கூறிய தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் விரைவில் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், சென்னையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை அறிவிப்பார் என நம்புகிறோம். இல்லையெனில் மாநில செயற்குழுவைக் கூட்டி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu