சிலிண்டர் வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சிலிண்டர் வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
X

சேலம் சிலிண்டர் வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சையை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சிலிண்டர் வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சையை புறக்கணித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சேலம் கருங்கல்பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 4 வீடுகள் சிலிண்டர் வெடித்த விபத்தில் தரைமட்டமானது. மேலும் நான்கிற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில்,12 நபர்கள் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் கைரேகை நிபுணர் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கட்டிடங்களின் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக வீடுகளில் குடியிருப்புவாசிகள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தங்களது உடைமைகள், பொருட்களை மீட்டு தரக்கோரி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து முற்றுகையிட்டனர். தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்தால் தங்குவதற்கு இடமில்லை என்றும், மழையின் காரணமாக வீட்டில் பீரோவில் உள்ள, ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லை. அதனை எடுக்கவும் போலீசார் அனுமதி மறுப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும் இடிபாடுகளை விரைவாக அப்புறப்படுத்தி, தங்கள் உடைமைகளை மீட்டுதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த கோட்டாட்சியர் விஷ்ணுவர்தனி காயமடைந்தவர்களை சந்தித்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு