சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக முதல்வர் முடிவு செய்வார்:அமைச்சர்
சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்த கோரிக்கைக்கு முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்த கோரிக்கைக்கு முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசியகட்சி சார்பில் சேலம் மாவட்ட வளர்ச்சித்திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சேலம் 3 ரோடு பகுதியில் நடைபெற்றது.அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில்,நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசியதாவது: தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச மின்சாரம் உடனே வழங்கபடும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளாக மின் மிகை மாநிலம் என்று கூறிக்கொண்ட கடந்த அதிமுக ஆட்சியில் இதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை. சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட விவசாயிகள் பெரும்பாலானோருக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகளை முறையாக கணக்கெடுத்து பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
சேலத்தில் திருமணிமுத்தாறு திட்டத்தை பற்றி 50 ஆண்டுகளை பேசிக்கொண்டு உள்ளோம், தற்போது தான் ஆய்வு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியை துவக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பயன் அடையும் வகையில் திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும் மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேட்டூரில் நிறைய தண்ணீர் இருந்தாலும் மேட்டூர் அருகே உள்ள கெளத்தூரில் குடிப்பதற்கு மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. உளுந்தூர்பேட்டை இருந்து சேலம் வரை உள்ள சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்,ஆத்தூர் தலைநகராக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்றார் ஈ.ஆர். ஈஸ்வரன்.
இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தற்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வைத்த அனைத்து கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஏற்கெனவே திமுக தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவை இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்த கோரிக்கை முதலமைச்சரிடம் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். விவசாய கடன் தள்ளுபடி குறித்து முதலமைச்சரை நேரில் விவசாயிகள் நேரில் சந்திக்க உள்ளனர். எதனால் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு நல்ல முடிவு எட்டப்படும்.
திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பதாகவும் அதை சீர்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். தற்போது சேலம் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இன்னும் 2 ஆண்டுகளில் முடிவுற்று விடும். அதன் பின்னர் கழிவுநீர் திருமணிமுத்தாறு கலப்பது பெரும்பாலும் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu