சேலத்தில் சிகிச்சையின்போது இறந்த மாணவன்: உறவினர்கள் அதிர்ச்சி

சேலத்தில் சிகிச்சையின்போது இறந்த மாணவன்: உறவினர்கள் அதிர்ச்சி
X
தனியார் மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டுள்ள உயிரிழந்த மாணவனின் உறவினர்கள்.
சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் உயிரிழந்ததால் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (17) என்ற பிளஸ்டூ மாணவன் உடல் நல குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மாணவனுக்கு தீவிர இருதயக் கோளாறு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் ரஞ்சித் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் மாணவன் ரஞ்சித்துக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதனிடையே மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை நடந்த பிறகு மூன்றாவது நாள் மாணவன் ரஞ்சித் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் மாணவன் ரஞ்சித் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதனால் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது தவறு நடந்துள்ளதா என்பதை கண்டறிய சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடத்தவும் தனியார் மருத்துவமனை ஒப்புக்கொண்டது.

ஆனால் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் அதையும் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறை வருவாய்த்துறை பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறிய போது இருதய அறுவை சிகிச்சை தவறின்றி சிறந்த முறையில் செய்துள்ளதாகவும், மாணவனுக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக எதிர்பாராத வகையில் அவர் உயிரிழந்ததாக பதிலளித்துள்ளனர்.

மாணவனுக்கு ஏற்கனவே கடுமையான இருதய கோளாறு இருந்து வந்தது. பல மருத்துவமனைகள் இந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர். ஆனாலும் இந்த மருத்துவமனையில் மாணவனை அனுமதித்து சிறப்பு மருத்துவரை கொண்டு நன்முறையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

இதனிடையே மாணவனின் உறவினர்களை அழைத்து சமூக உரிமை நீதி என்று ஒரு கும்பல் மருத்துவ மனையின் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்கள் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்குமாறு பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணம் பறிக்கும் நோக்கத்தோடு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோரை கண்டித்து தனியார் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் கண்ணடம் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்