சேலம்-விருத்தாச்சலம் புதிய பாதையில் விரைவில் மின்சார ரயில்: கோட்ட மேலாளர் தகவல்
விருத்தாசலம்-சேலம் வரையிலான வழிதடத்தில் விரைவு ரயில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சேலம் விருத்தாச்சலம் இடையே கடந்த 2007ம் ஆண்டு அகல ரயில் பாதை சேவை தொடங்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழித்தடத்தை மின்மயமாக்கல் ரூபாய் 200 கோடி மதிப்பீட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 136 கிலோமீட்டர் வரையிலான இந்த பாதையை மின் மயமாக்கும் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஏ.கே. ராய் மின் பொறியாளர் மேத்தா ஆகியோர் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கௌதம் ஸ்ரீநிவாஸ் முன்னிலையில் நேற்று சிறப்பு ரயில் வண்டியில் சென்று அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று விருத்தாசலம் முதல் சேலம் வரையிலான வழிதடத்தில் விரைவு ரயில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரயில் இயக்கப்பட்டது. சுமார் 12 மணி அளவில் விருத்தாசலத்தில் புறப்பட்ட இந்த சிறப்பு ரயில் பிற்பகல் 2:10 மணி அளவில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், புதிதாக மின்மயமாக்கப்பட்ட சேலம் விருத்தாசலம் இருப்புப் பாதையில் விரைவு ரயில் சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகவும், இந்த சோதனையின் சான்றிதழ் இரண்டு நாட்களில் பாதுகாப்பு ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டு புதிய மின் பாதையில் ரயில் சேவை தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார். மின்பாதையில் ரயில் சேவை தொடங்கப்பட்டால் பயண நேரத்தில் அரை மணி நேரம் குறையும் என்றும் டீசல் என்ஜினால் ஏற்படும் சுற்றுசூழல் மாசு தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சேலத்திலிருந்து விருதாச்சலம் வரை இருப்பு பாதை மின்மயமாக்கப்பட்டதை அடுத்து சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து வழித்தடங்களும் மின்மயமாக்க்கப்பட்டுள்ளது ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu