ரூ.250-ல் முழு உடல் பரிசோதனை திட்டத்திற்கு சேலம் ஆட்சியர் ரூ.50,000 வழங்கல்
சேலம் அரசு மருத்துவமனையில் 250 ரூபாய் செலவில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்திற்காக தனது சொந்தப் பணத்தில் 50 ஆயிரம் ரூபாயை கொடுத்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.
சர்வதேச நீரிழிவு நோய் தினவிழா சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி நீரிழிவு நோய் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு கையேட்டினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் சேலம் அரசு மருத்துவமனை நீரிழிவு துறையின் மூலமாக வருடத்திற்கு ஒரு லட்சம் புற நோயாளிகளும், ஐம்பதாயிரம் உள் நோயாளிகளும் பயன் அடைந்து வருவதாகவும் சென்னைக்கு அடுத்து நீரிழிவு நோய்க்கு என அனைத்து சேவைகளும் உள்ள துறையாக சேலம் அரசு மருத்துவமனை திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.
சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே இடத்தில் அனைத்து விதமான முழு உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர், தனியார் மருத்துவமனைகளில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி வரும் நிலையில் 250 ரூபாய் மட்டுமே செலுத்தி சேலம் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்றும் இத்திட்டத்திற்கு என தேவைப்படும் கருவிகள் வாங்குவதற்காக தனிப்பட்ட முறையில் தன்னுடைய சம்பளத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் துறைத் தலைவர்கள் மருத்துவர் சுரேஷ் கண்ணன் மற்றும் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu