சேலத்தை ஈர்க்கும் முதலீடுகள்..!

சேலத்தை ஈர்க்கும் முதலீடுகள்..!

டெலாய்டு நிறுவனம் (கோப்பு படம்)

தமிழ்நாட்டில் கோவை மட்டுமே தொழில் வளத்தில் சிறந்து விளங்கி வருகிறது. தற்போது சேலத்தை நோக்கி முதலீடுகள் திரும்பியுள்ளன.

தமிழ்நாட்டில் சென்னையைத் தாண்டி பிற பகுதிகள் வளர்வதன் மூலம் ஒட்டுமொத்தமாக மாநில அளவில் வேகமாக வளர்ச்சி அடைய முடியும் என்பதை அரசு தீவிரமாக நம்புகிறது. இதற்கு ஏற்றார் போல் தமிழ்நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பட்டதாரிகளும், திறன் வாய்ந்த ஊழியர்களும் அதிகளவில் உள்ளனர்.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு புதிய முதலீடுகளைச் சென்னையை மட்டுமே குறிவைத்து ஈர்க்காமல் தெற்கில் தூத்துக்குடி, மேற்கில் கிருஷ்ணகிரி வரையென அனைத்து மாவட்டத்திலும் புதிய முதலீடுகளையும், தொழிற்சாலைகளையும் ஈர்த்துள்ளது.

இந்தப் பயணத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கடந்த 5 வருடத்தில் அதிகப்படியான முதலீட்டையும், வர்த்தகத்தையும் ஈர்த்தது கொங்கு மண்டலம் தான். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக சேவைத் துறையில் அதிகப்படியான முதலீட்டையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கியது கோயம்புத்தூர் மாவட்டம்.

இந்த நிலையில் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தையும் சேர்த்துப் பிற மாவட்டங்களும் இந்த வைப்-ஐ பெற்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் கோயம்புத்தூர், திருப்பூர்-க்கு அடுத்தபடியாக கார்பரேட் நிறுவனங்களின் கவனத்தைப் பெறுவது சேலம் மாவட்டம் தான். திறன் வாய்ந்த ஊழியர்களுக்குப் பஞ்சமில்லா மாவட்டமாக இருப்பது மட்டும் அல்லாமல் சமீபத்தில் விமானச் சேவையும் துவங்கப்பட்டு உள்ளதால் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சர்வதேச அளவில் கார்பரேட் கணக்கியல் துறையில் பிக் 4 எனப் பெருமையுடன் அழைக்கப்படும் நிறுவனங்களில் ஒன்றான டெலாய்ட் சேலத்தில் புதிதாக ஒரு அலுவலகத்தைத் திறக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தைத் தொடர்ந்து மதுரையிலும் டெலாய்ட் தனது புதிய அலுவலகத்தைத் திறக்க உள்ளது.

டெலாய்ட் நிறுவனம் இந்தியாவில் 16 நகரங்களில் 18 அலுவலகங்களை வைத்திருக்கும் நிலையில் சேலம் மற்றும் மதுரையில் திறக்கப்படும் அலுவலகம் மூலம் மொத்த நகரங்கள் பட்டியல் 18 ஆக உயர உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இதுகுறித்து தி லேசம் நியூ என்ற டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் சேலத்தின் அதிரடி பொருளாதார வளர்ச்சிப் பாதையின் துவக்கமாக டெலாய்ட் நிறுவனத்தின் வருகை பார்க்கப்படுகிறது. சேலத்தில் ஏற்கனவே ஐடி பார்க், புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் என அனைத்தும் தயாராக இருக்கும் வேளையில் கடந்த 5 வருடத்தில் சிறிதும், பெரிதுமாக முதலீடுகள் வர துவங்கியுள்ளது.

Tags

Next Story