சாதிமறுப்பு திருமணம் செய்தோருக்கு உரிமைகள்: கொளத்தூர் மணி வலியுறுத்தல்

தேசிய தகவல் ஆணையத்துடனான காணொளி நேர்காணல்.
சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படுவதில்லை என்று இந்திய கலப்பு திருமண தம்பதியர் சங்கத்தினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் அந்த அமைப்பின் மாநிலத்தலைவர் அழகேசன் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் கோரியிருந்தார். இதன் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், கோரிய தகவல்கள் முறையாக கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தகவல் கோரிய அழகேசன் தேசிய தகவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தேசிய தகவல் ஆணையத்துடனான காணொளி நேர்காணல் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் காணொளி நேர்காணலில் இந்திய கலப்பு திருமண தம்பதியர் சங்க மாநிலத் தலைவர் அழகேசன் மற்றும் திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் 3 நிமிடங்கள் வரை மட்டுமே நடைபெற்ற இந்த காணொளி நேர்காணலில் தேசிய தகவல் ஆணையர் வனஜா எம்.சர்ணா விண்ணப்பதாரருக்கு தங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திராவிட விடுதலை கழகத்தலைவர் கொளத்தூர் மணி, பட்டியலினத்தவரை சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பட்டியல் இனத்தின் அடிப்படையில் எந்த உரிமைகளும் வழங்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கூறப்பட்ட தகவல் முறையாக வழங்கப்படாமல் தட்டிக் கழிக்கப்பட்டு உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கான அடிப்படை வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகம் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu