சேலம் அருகே ஏரியில் அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்பு: தாய்க்கு உருக்கமான மெசேஜ்
ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கவுசல்யா.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள மூக்கனேரியில் நேற்றைய தினம் 2 கால்கள் மட்டும் வெளியே தெரியும்படி ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடைபயிற்சிக்கு சென்றவர்கள் சிலர், இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் காவல் உதவி ஆணையர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மீன் பிடிப்பவர்களின் உதவியுடன் அந்த பெண்ணின் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அப்போது சடலமாக மிதந்த பெண்ணின் இடது கையில் துப்பட்டாவின் ஒரு பகுதி கட்டப்பட்டும், மறுபகுதியில் சுமார் 10 கிலோ எடையிலான கல்லும் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறிது நேரம் போராடி பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பெண்ணை யாராவது கொலை செய்து துப்பட்டாவில் கல்லை கட்டி தண்ணீரில் மூழ்கடித்தார்களா? அல்லது அந்த பெண், துப்பட்டாவில் கல்லை கட்டிக்கொண்டு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் மூக்கனேரியில் சடலமாக மிதந்தது கன்னங்குறிச்சி சத்தியா நகரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் மனைவி கவுசல்யா (28) என்பது தெரியவந்தது. போலீசாரின் மேல் விசாரணையில்,சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ரவீந்திரனுக்கும், செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த கவுசல்யாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து தற்போது இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக கவுசல்யா தனது பெற்றோர் வீட்டில் மகனுடன் வசித்து வந்துள்ளார்.
வீட்டு வேலைக்கு சென்று வந்த அவர் கடந்த 4 ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் மாயமானது குறித்து கவுசல்யாவின் பெற்றோர் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கவுசல்யாவை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் மூக்கனேரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கவுசல்யா அன்று இரவு அவரது தாயின் செல்போன் எண்ணின் வாட்ஸ்-ஆப்பிற்கு உருக்கமாக பேசிய வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் கவுசல்யா பேசும் போது, அம்மா என்னை மன்னித்து விடு, எனக்கு உடலில் பல பிரச்சினை உள்ளது. அதை உங்களிடம் சொல்ல முடியவில்லை. நான் உங்களுக்கு தொந்தரவாகவும் இருக்க முடியாது. என்னால் நீங்கள் கஷ்டப்பட்டது போதும், இனிமேல் கஷ்டப்பட வேண்டாம். அதனால் தான் இந்த முடிவை எடுக்கிறேன். வேறு யாரும் இதற்கு காரணம் இல்லை. என்னை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம், சந்தோஷமாக இருங்கள். அப்பாவை நன்றாக பார்த்துக்கொள். எனக்கு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் எந்த பிரச்சினையும் இல்லை என்று பேசி உள்ளார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu