சேலத்தின் வரலாற்று ஆவணங்கள் காட்சிப்படுத்த திட்டம்: ஆட்சியர் தகவல்

சேலத்தின் வரலாற்று ஆவணங்கள் காட்சிப்படுத்த திட்டம்: ஆட்சியர் தகவல்
X

சேலம் அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால நாணயங்கள் மற்றும் வரலாற்று பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர் கார்மேகம். 

சேலத்தின் வரலாற்று ஆவணங்கள் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு அருங்காட்சியகம் மற்றும் சேலம் வரலாற்று சங்கம் இணைந்து நடத்திய பழங்கால நாணயங்கள் மற்றும் வரலாற்று பொருட்கள் கண்காட்சி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். சேலம் மாவட்ட அளவில் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க பழங்கால பொருட்கள் மற்றும் நாணய கண்காட்சியினை அவர் பார்வையிட்டார்.

பின்னர் நடைபெற்ற சேலம் வரலாற்று கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசிய அவர், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தமிழக அளவில் தொடங்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக 1792 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் தொடங்கப்பட்டதாகவும், இன்றைய சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த சேலம் ஜில்லாவாக பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

சேலம் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக பணியாற்றிய அலெக்சாண்டர் ரீட் மற்றும் உதவி ஆட்சியராக பணியாற்றிய தாமஸ் மன்றோ இருவரும் இணைந்து இந்திய அளவில் முதல் முறையாக ரயத்துவாரி எனப்படும் குடிமக்களிடம் நேரடி வரி வசூல் செய்யும் நடைமுறையை தொடங்கியதாகவும் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

229 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்று ஆவணங்கள் முக்கிய பகுதிகள் பொதுமக்களிடம் காட்சிப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும், இதன்மூலம் சேலம் மாவட்டத்தின் வரலாற்றினை இன்றைய இளைஞர்கள் முழுமையாக தெரிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, சேலம் வரலாற்று சங்க செயலாளர் பர்னபாஸ், சேலம் அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லை அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story