முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாளை முதல் அபராதம்: ஆட்சியர் கார்மேகம்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாளை முதல் அபராதம்: ஆட்சியர் கார்மேகம்
X

சேலத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாளை முதல் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை.

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் சேலத்தில் கொரோனா தடுப்பு வழி காட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் ஐந்து ரோடு சந்திப்பில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு முககவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்து முகக்கவசம் வழங்கினார். மேலும் அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கார்மேகம் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இன்று அறிவுரை வழங்கியதாகவும் நாளை முதல் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். முகக்கவசம் அணியாதவர்களை பேருந்துகளில் ஏற்றக் கூடாது என்றும் முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை உரிமையாளர்கள் கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையோடு செயல்பட்டு நோய் பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வின்போது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!