சேலத்தில் சாய்ந்த 4 மின்கம்பங்கள்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 50 குடும்பத்தினர்
சாய்ந்து விழுந்த டிரான்ஸ்பார்மரை அப்புறப்படுத்தும் ஊழியர்கள்.
சேலம் மாநகராட்சி பாரதியார் நகர் கொல்லம்பட்டறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட கூலித்தொழில் செய்து வரும் குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் சாய்ந்து விழும் நிலையில் டிரான்ஸ்பார்ம் கம்பம் இருந்துள்ளது.
இதுகுறித்து மின்சார துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நள்ளிரவு சேலம் மாநகர பகுதியில் பெய்த கன மழை காரணமாக அப்பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் டிரான்ஸ்பார்மர் கம்பம் சாய்ந்து விழுந்ததில் குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 4 மின்சாரக் கம்பங்கள் அடுத்தடுத்து குடியிருப்பு வீடுகள் மேல் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக கம்பம் சரிந்து விழுந்த போது மின்சாரம் எதுவும் இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர்தப்பினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 3 மாதத்திற்கு முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் கம்பம் பழுதாகி உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்று மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவற்றை கண்டுகொள்ளாத அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டனர்.
இதனால் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக டிரான்ஸ்பார்மர் கம்பம் சாய்ந்து விழுந்ததில் குடியிருப்பு பகுதியில் இருந்த கம்பங்களும் விழுந்தது என்றும், சாய்ந்து விழுந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்களை உடனடியாக சரி செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். விழுந்துகிடக்கும் டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்றியமைக்கவும் கோரிக்கை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu