நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி நகைகளை அணிந்து நூதன வேட்புமனு
தமிழக அரசு முறையாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனக் கூறி சேலத்தில் நகைகளை அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த தேமுதிக வேட்பாளர்.
சேலம் மாநகராட்சி மன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் இன்று அனைத்து தேர்தல் அலுவலங்களிலும் வேட்புமனுத்தாக்கல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதனடிப்படையில் சேலம் அஸ்தம்பட்டி மாநகராட்சி மன்றத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. வேட்பாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்து வரும் நிலையில், சேலம் மாநகராட்சி 13வது கோட்டத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நாராயணன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தபடி முறையாக நகை கடன்களை தள்ளுபடி செய்யப்படவில்லை எனக் கூறி அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படாததை கண்டித்தும் கழுத்தில் நகைகளை அணிந்தபடி கட்சி நிர்வாகிகளுடன் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார். தொடர்ந்து வேட்பாளர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது தமிழக அரசு மக்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி முறையாக நகை கடன்களை தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், அதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்க செல்லும் போது ஏராளமான பெண்கள் இந்த கோரிக்கையை குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அதனால் பொது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இதுபோன்று நகைகளை அணிந்து நகை கடன் தள்ளுபடி என்பது ஏமாற்று வேலை என தெரிவிக்கும் வகையில் நகைகளை அணிந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
தான் வெற்றிபெற்றால் வார்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர உறுதி அளித்துள்ளதாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேமுதிக வேட்பாளர்கள் இந்த நூதன நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu