சேலத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பு ரூ.2.85 லட்சம் வழங்கல்

சேலத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பு ரூ.2.85 லட்சம் வழங்கல்
X

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மக்கள் பங்களிப்பாக ரூ.2.85 இலட்சத்தை ஆணையரிடம் வழங்கும் ஸ்ரீ காளியம்மன் கோவில் தெரு குடியிருப்போர் நலச்சங்கத்தினர்.

சேலம் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.2.85 லட்சம் மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கப்பட்டது.

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் நீர் நிலைகள் புரணமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பராமரித்தல், விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்துதல், நீருற்றுகள், தெரு விளக்குகள், மரம் வளர்த்தல், பள்ளி, கல்லூரி வகுப்பறைகள் கட்டுதல், மேம்படுத்துதல், மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பு சுவர் அமைத்தல், நவீன நூலகம் ஏற்படுத்துதல், கற்றல் மையங்கள், தார் சாலைகள் அமைத்தல், சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்தல், வணிக வளாகங்கள் கட்டுதல் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்ததக்க வகையில் உள்ள கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது சுகாதார வளாகங்கள், கடைகள், மின் மயானங்கள் ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக திட்ட மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்கு தொகையை பொதுமக்கள் பங்களிப்பாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிதி வழங்கினால், இரண்டு பங்கு நிதியை அரசு மூலம் பெற்று திட்டம் செயல்படுத்தப்படும்.

அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு 150ற்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுடன் ஆணையாளர் கலந்துறையாடி நமக்கு நாமே திட்டத்தை மாநகராட்சிப் பகுதியில் சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்கு சங்கங்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் கோட்டம் ஸ்ரீ காளியம்மன் கோவில் தெரு குடியிருப்போர் நலச்சங்கத்தின் மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மூன்றில் ஒரு பங்கு பொது மக்கள் பங்களிப்பாக ரூ.2.85 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மடங்கு அரசு நிதி உதவியுடன் ரூ.8.50 இலட்சம் மதிப்பில் 181 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் பங்களிப்பான ரூ2.85 இலட்சத்திற்கான காசோலையினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜிடம் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் புஷ்பராஜ், துணை தலைவர் தங்கதுரை ஆகியோர் வழங்கினார்கள்.


Tags

Next Story