இருதய நோய் சிகிச்சை: தமிழக அளவில் 2ம் இடத்தில் சேலம் அரசு மருத்துவமனை

இருதய நோய் சிகிச்சை: தமிழக அளவில் 2ம் இடத்தில் சேலம் அரசு மருத்துவமனை
X

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி. 

இருதய நோய் சிகிச்சையில் சேலம் அரசு மருத்துவமனை கடந்த இரண்டு மாதங்களாக முதலிடத்தில் உள்ளது என மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள இருதய நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு அதிநவீன உபகரணங்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி சேலம் அரசு மருத்துவமனையில் இருதய நோய் சிகிச்சை பிரிவு சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். குறிப்பாக, சேலம் அரசு மருத்துவமனைக்கு மாதந்தோறும் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இருதய நோய் தொடர்பாக அவசர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு இருதய நோய் சிகிச்சை குழுவினர் உடனடியாக அதிநவீன சிகிச்சை அளிப்பதாகவும், இதன் மூலம் கடந்த இரண்டு மாதமாக இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவில் உள்ளதாகவும் தெரிவித்த மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, சிகிச்சை மட்டுமன்றி சிகிச்சை முடிந்து செல்பவர்களை முதலமைச்சரின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் கண்காணித்து உரிய மருந்து மாத்திரைகளை வழங்கி வருவதாகவும் கூறினார்.

இருதய நோய் சிகிச்சையில் சேலம் அரசு மருத்துவமனை கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அளவில் முதல் இடத்தில் உள்ளதாகவும் இங்குள்ள மருத்துவ வசதிகளை ஏழை எளிய மக்கள் உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!