சேலத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை திடீர் மயக்கம்: கட்சியினரிடையே பரபரப்பு
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சர் செம்மலை.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை கண்டன கோஷங்கள் எழுப்பினார். அதிமுக சேலம் புறநகர் மற்றும் மாநகர மாவட்டம் சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு போடும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆர்பாட்டத்தின் வாயிலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினருக்கு இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருக்கும் போது, அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தொண்டர்கள் மயங்கி விழுந்த செம்மலையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக தூக்கி சென்றனர். அப்போது செம்மலை முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. பின்னர் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடைக்கு சென்று செம்மலை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu