திமுகவின் ஆட்சி அதிகாரம் இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே: எடப்பாடி பழனிசாமி

திமுகவின் ஆட்சி அதிகாரம் இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே: எடப்பாடி பழனிசாமி
X

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக அரசை கண்டித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திமுகவின் ஆட்சி அதிகாரம் இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக அரசை கண்டித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, அதிமுகவை வீழ்த்த எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது. அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி என்று கூறினார். தமிழக அரசு சம்பிரதாயத்திற்காக ஏதோ ஒரு சில திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்.

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வில்லை என்ற அவர், 2006 -2011 திமுக ஆட்சி கூட்டுறவு கடன்களை எப்படி தள்ளுபடி செய்ததோ அதே போலத்தான் நாங்களும் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தோம். ஆனால் பொய், பித்தலாட்டம் கூறி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. நகை கடன் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகா போல 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளனர். இதேபோல் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும். எனவே டீசல் விலை 10 ரூபாய் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.

அதிமுக ஆட்சியில் அம்மா சிமெண்ட் 190 ரூபாய்க்கு கொடுத்தோம். ஆனால் திமுக அரசு அதை வலிமை சிமென்ட் என்று கூறி 400 ரூபாய்க்கு கொண்டு வந்துள்ளது.பெயரை மாற்றினாலும் பரவாயில்லை. ஆனால் விலையை குறைக்க வேண்டும் என்றும் கூறினார். திமுக ஆட்சியில் இதுவரை 557 கொலைகள் நடந்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட அரசாங்கமாக திமுக அரசாங்கம் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்றும், நிர்வாக கோளாறு காரணமாக சில காவல்துறை அதிகாரிகளே தவறு செய்கின்றனர் என்றார்.

தமிழகத்தில் பேட்டரி இல்லாமல் 2 ஆயிரம் அரசு பேருந்துகள் பனிமனையில் கிடப்பில் உள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் 5000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது. தற்போது பொதுமக்களே ஏற பயப்படும் வகையில் அரசு பேருந்துகள் உள்ளது. மேலும் அணில் காரணமான மின்வெட்டு ஏற்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் கூறுகிறார்.

பழைய பென்ஷன் திட்டத்தை நம்பிதான் அரசு ஊழியர்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால் அதனை திமுக அரசு நடைமுறை படுத்தவில்லை; இது சாத்தியம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் தெரிவித்து விட்டார். கனமழையால் சென்னையே தண்ணீரில் மிதந்தபோது, முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு என்கிற பெயரில் டீக்கடையில் டீ குடித்து செல்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியால்தான் சென்னையில் தண்ணீர் தேங்கியதாக திமுக அரசு கூறுவது ஏற்புடையது அல்ல. மழைகாலம் துவங்குவதற்கு முன்பே முன்னேற்பாடு பணிகளை செய்யாமல் பருவமழை துவங்கியதும் பணிகளை துவங்கியது அரசின் தவறு என்று குற்றம் சாட்டினார்.

கொரோனா காலத்தில் மக்களை காத்த 2000 அம்மா மினி கிளினிக்கை திமுக அரசு மூடினால் எதிர்வரும் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பீர்கள் என்ற குறிப்பிட்ட அவர் அ.தி.மு.க செய்த திட்டங்களை பற்றி பேசாமல் அ.தி.மு.க அரசு எதுவும் செய்யவில்லை என சேலத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பெய்யான பட்டியலை பேசுகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா, ஈரடுக்கு மேம்பாலம் அமைத்தது உள்பட அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி பட்டியலிட்டு பேசினார்.

மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவை தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்வழக்குகள் போட லஞ்ச ஒழிப்பு துறையை தி.மு.க அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தினால் நாங்கள் பயப்பட மாட்டோம்; எங்கள் ரத்தத்திலேயே வீரம் ஊறியுள்ளது. ஆட்சி மாறினால் காட்சி மாறும். திட்டமிட்டே அதிமுக மீது அவதூறு பரப்பினால் அதிமுக தக்க பதிலடி கொடுக்கும்.

மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள். எங்களுக்கு தொந்தரவு செய்தால் எதையும் சந்திக்க நாங்கள் தயார். திமுகவின் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சமாட்டோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்கள் பணி தொடரும். மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் முதல் கட்சி அதிமுக தான்; அதிமுகவை வீழ்த்த நினைத்தால் வீழ்ந்து போவார்கள்; அழிக்க நினைத்தால் அடையாளம் இல்லாமல் போவார்கள் என்று காட்டமாக தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு விரைந்து நிறைவேற்றவில்லை எனில் மக்கள் மன்றத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்ல போராட்டங்களை தொடருவோம். ஒரே நாடு ஒரே தேர்தல் என பிரதமர் அறிவித்துள்ளதால் இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே திமுக ஆட்சி இருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil