சேலத்தில் அதிமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி திமுகவினர் வாக்குவாதம்

சேலத்தில் அதிமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி திமுகவினர் வாக்குவாதம்
X

வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

சேலத்தில் சொத்து, குடிநீர் வரி செலுத்தாத அதிமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து இன்றைய தினம் வேட்புமனு பரிசீலனை அந்தந்த தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில், சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாத அதிமுக வேட்பாளர் நடேசனின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி திமுகவினர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் வரிபாக்கிக்கான கணிணி சான்றை கொடுத்தனர். இதனால் அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நடேசன் கூறுகையில், அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் திமுகவினர் குறுக்குவழியில் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக அதிகாரிகளை பயன்படுத்தி தனது வேட்புமனுவை நிராகரிக்க முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நடேசனின் மனைவி பெயரில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 850 ரூபாய் சொத்து வரி மற்றும் 21 ஆயிரத்து 444 ரூபாய் குடிநீர் வரி நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story