சேலத்தில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் அமர வைப்பு: பெற்றோர்கள் வாக்குவாதம்
வெளியில் அமரவைக்கப்பட்டுள்ள மாணவிகள்.
தமிழகத்தில் கொரானா தொற்று குறைந்துள்ளதால் அனைத்து வகையான பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. பள்ளி திறந்த முதல் நாள் முதலே தனியார் பள்ளிகள் பள்ளிக்குச் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தை உடனடியாக செலுத்த வற்புறுத்தப்படுவது ஆங்காங்கே நடந்தேறி வருகிறது.
மேலும் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவ மாணவிகளை அழைத்து கடுமையாக எச்சரிப்பதும் அவர்களை வெளியே நிற்க வைப்பதும், வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், சேலம் காந்தி ரோடு பகுதியில் உள்ள தனியார் (ஈடன் கார்டன்) பள்ளி ஒன்றில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ-மாணவிகளை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடன் கார்டன் பள்ளி சுய நிதி பள்ளி என்பதால் கல்வி கட்டணம் கட்டாத மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்க வேண்டாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இப்பள்ளியில் படிக்கும் கட்டணம் செலுத்தாத 20 மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே அமரவைத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்விக்கட்டணம் 44 ஆயிரம் முழு தொகையையும் இரண்டு தவணையாக கட்ட சொல்லி பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே பாதி தொகை கட்டிய நிலையில் முழு தொகையையும் கட்ட சொல்லி நிற்பந்தித்த தால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகளை நேரடியாக பெற்றோர்களே நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்த வீடியோவை பதிவு செய்துள்ளனர். அப்போது பள்ளி நிர்வாகிகளுக்கும் பெற்றோர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வீடியோவை பதிவு செய்யக்கூடாது என்று சொல்லும் நபர் தாங்கள் செய்தது தவறு என உணராமல் பெற்றோர்களை வெளியில் அனுப்புவதிலேயே குறியாக இருந்ததையும் ஆடியோவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதேபோல் சேலம் மாவட்டத்தில் நேற்று இளம்பிள்ளை உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவியை ஆசிரியர் தாக்கியதாக பெற்றோருடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் இன்று கல்வி கட்டணம் செலுத்தாத மாணவிகளை வகுப்பறைக்கு வெளியே வந்து அமர வைத்து படிக்க வைக்கும் காட்சிகள் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu