சேலத்தில் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம்: 5 பேர் உயிரிழப்பு
சிலிண்டர் வெடித்து தரைமட்டமான வீடுகள்.
சேலம் மாநகரம் 57 வது கோட்டம் கருங்கல்பட்டி பாண்டு ரங்க விட்டல் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன மிகவும் நெருக்கமான குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் வசித்து வருபவர் கோபி. எலக்ட்ரிகல் வேலை செய்து வரும் இவரது தாய் ராஜலட்சமி இன்று காலை 6.30 மணியளவில் தேநீர் வைப்பதற்காக சமையல் அறைக்கு சென்று அடுப்பு பற்ற வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அந்த சமையல் அறையில் சமையல் எரி வாயு கசிந்து இருந்ததை அறியாமல் பற்ற வைத்ததால் சிலிண்டர் வெடித்தத்தில் கோபி வீடு மட்டுமல்லாமல் அருகே இருந்த மேலும் 4 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 5 வீடுகளிலும் இருந்த 15 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர்.
மேலும் கட்டிடத்தின் பாகங்கள் வெடித்து சிதறியதில் பால் வியாபாரி ஒருவரும், எதிர் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்த தனலட்சுமி என்பவரின் மீதும் விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து வெடி சப்தம் கேட்டு அதிர்ந்து போனவர்கள் இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த பத்துக்கும் மேற்பட்டோரை மீட்டனர். இதில் ராஜலட்சுமி(80) உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் அதில் தீயணைப்பு துறை அலுவலரான பத்மநாபன் தனது மனைவியுடன் சிக்கியிருப்பதாகவும் இது தவிர மேலும் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியானதையடுத்து தீயணைப்புத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியை தீவிரப்படுத்தினர்.
மிகவும் நெருக்கமான குடியிருப்பு பகுதி என்பதால் மீட்பு பணியை மேற்கொள்ள மிகவும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி இருந்த 10 வயது சிறுமி பூஜாஸ்ரீ உயிருடன் மீட்கப்பட்டார். சிறுமி மீட்கப்பட்டதை அறிந்த பொது மக்கள் கைதட்டி தீயணைப்புத் துறையினருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் நஜ்மல் ஹோதா, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் வேலு உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.சேலம் மட்டுமல்லாமல் ஆத்தூர், வாழப்பாடி, ஆகிய பகுதியில் இருந்தும் தீயணைப்புத் துறையினர் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதனிடையே 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு துறை அலுவலர் பத்மநாபன்(49) மற்றும் அவரது மனைவி தேவி(35) ஆகியோரது உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருந்த காரத்திராம் என்ற 20 வயது வாலிபர், எல்லம்மாள் என்ற 90 வயது மூதாட்டி ஆகிய இருவரின் உடலும் மீட்கப்பட்டது.
இதனிடையே மீட்பு பணியின் போது இடிபாடுகளில் இருந்து எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது.இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் கசிந்த சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றினர்.
மேலும் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானத்தில் படுகாயமடைந்த கணேசன் (37) அவரது மகன் சுதர்சன்(10), மற்றும் கோபால்(70), நாகசுதா (30), தனலட்சுமி(64), முருகன் (46), மோகன்ராஜ் (40), லோகேஷ் (18), வரங்கடராஜன் (62), இந்திரா (54), கோபி (58), உஷாராணி(40), பூஜாஸ்ரீ(10) ஆகிய 13 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கோபி என்பவர் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu