ரயில்களில் தொடரும் கஞ்சா கடத்தல்: காவல்துறை மீது பொதுமக்கள் சந்தேகம்

ரயில்களில் தொடரும் கஞ்சா கடத்தல்: காவல்துறை மீது பொதுமக்கள் சந்தேகம்
X

சேலம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.

சேலம் வழியாக செல்லும் ரயில்களில் தொடரும் கஞ்சா கடத்தலால் காவல்துறை மீது பொதுமக்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப்பின் தற்போது அனைத்து ரயில்களும் படிப்படியாக இயக்கப்படுகிறது. இதனால் ரயில்களில் குற்றச் சம்பவங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை தடுக்க ரயில்வே காவல்துறை சார்பில் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும், ஏதாவது ஒரு வகையில் குற்றம் நடந்து கொண்டுதான் உள்ளது.

அந்த வகையில் சேலம் வழியாக செல்லும் ரயில்களில் தற்போது குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட வெளிமாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயிலில் கஞ்சா கடத்துவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வப்போது காவல்துறையினரும் கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சேலம் வழியாக செல்லும் ரயிலில் கடத்தப்பட்ட சுமார் 50 கிலோ கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்யும் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்வதில்லை.

ரயில் பெட்டியில் சோதனையிடும் போது பைகள் மட்டும் தனியாக இருந்ததாகவும் பைகளை மட்டும் கைப்பற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கஞ்சா பைகளை தொடர்ந்து குறிவைத்து கைப்பற்றும் காவல் துறையினருக்கு அதனை கடத்திவரும் குற்றவாளிகள் யார் என்பது தெரியவில்லை என்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தல் தொடர்பாக காவல்துறை தரும் பத்திரிக்கை செய்திக்குறிப்பில், ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பைகள் மூன்று பைகள் மட்டுமே தனியாக கிடந்ததாக செய்தி குறிப்பில் கூறும் காவல்துறையினர், குற்றவாளிகள் என்ன ஆனார்கள் என்பதை தெரிவிப்பதில்லை. குற்றவாளிகளை காவல்துறையினர் தப்பிக்க விடுகின்றனரா அல்லது கஞ்சா கடத்துவதை நெட்வொர்க் அமைத்து குற்றவாளிகள் செய்துவருகின்றதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் அதனை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது ரயிலில் வழியாக கஞ்சா கடத்துவது சகஜமாகி ஆகிவிட்டது. கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து அவர்களை தண்டனைக்கு உள்ளாகினால் மட்டுமே இதுபோன்ற ரயில் பெட்டிகளில் பைகள் மட்டும் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் முடிவுக்கு வரும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேற்று ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக சென்ற ரயிலில் 8 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று கேரளா செல்லும் ரயிலில் அதே எட்டுகிலோ கஞ்சா மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!