சேலத்தில் அதிமுக வேட்பாளர் கைது: சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினர்
சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்.
சேலம் தாதகாப்பட்டி பகுதியில் அதிமுக சார்பாக 58 ஆவது வார்டில் போட்டியிடும் பாண்டியன் என்பவர், இந்திரா நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் திமுகவினர் மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் சாக்கடை சரிசெய்யும் பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது அப்பகுதிக்கு சென்ற அதிமுக வேட்பாளர் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதனால் இரண்டு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது திமுக வேட்பாளரின் சகோதரர் சின்னையன் என்பவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கீழே விழுந்த நபர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதுதொடர்பாக அன்னதானபட்டி காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் பாண்டியன் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, சேலம் அரசு மருத்துவமனைக்க்கு வந்தபோது அன்னதானப்பட்டி காவல்துறையினர் அதிமுக வேட்பாளர் பாண்டியனை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இதையடுத்து தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் மாநகர காவல்ஆணையர் அலுவலகம் முன்பு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு வருகை தந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை உடன்படாததால் காவல் நிலையம் முன்பாக உள்ள சேலம் கொண்டலாம்பட்டி பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் சிலரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனிடையே அதிமுக வேட்பாளர் பாண்டியனை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதற்காக காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றினர். இதனையடுத்து காவல் நிலைய வளாகத்தில் காவல்துறை வாகனங்களை சிறைபிடித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டங்களுக்கு இடையே அதிமுகவினரை சிறிது சிறிதாக கலைத்து வாகனத்தை காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.
அதிமுக வேட்பாளர் வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu