சேலம் அழகிரிநாத சுவாமி திருக்கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சேலம் ஸ்ரீ அழகிரிநாத சுவாமி திருக்கோயிலில் தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள் கூட்டம்.
பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்தால் துன்பங்கள் விலகி நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம். அதனால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும்.
ஆனால் நடப்பு ஆண்டு கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டதால், கடந்த நான்கு வாரமாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் பக்தர்கள் அனைவரும் கோயிலின் முன்பு வெளியே நின்று வழிபட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, நேற்று முதல் அனைத்து நாட்களிலும் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றைய தினம் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகிரிநாத சுவாமி திருக்கோயில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பெருமாளுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu