சேலம் பள்ளப்பட்டி ஏரியில் 10 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழப்பு
உயிரிழந்த சிறுமி தீபிகா.
சேலம் பள்ளப்பட்டி ஏரி அருகே கோடிபள்ளம் பகுதியில் முருகன், நித்தியா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களது கடைசி மகள் தீபிகா(10) தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் காலைக்கடன் கழிப்பதற்காக சென்ற தீபிகா நீண்ட நேரம் ஆகியும் குழந்தை திரும்ப வராத நிலையில் சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் பெற்றோர் தேடி வந்துள்ளனர்.
அப்போது பள்ளப்பட்டி ஏரியின் அருகே குழந்தையின் செருப்பு இருப்பதை கண்டு தண்ணீரில் தேடிப் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்ததையடுத்து குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குழந்தையின் உடலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்து செல்லும் போது உறவினர்கள் கதறிக்கொண்டு ஆம்புலன்ஸ் பின்பு ஓடிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரியை மேம்படுத்தி, நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் வேகமாக நடைபெறாததால், சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. ஏரியை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வதற்கு முன்பாக சுற்றியும் வேலி அமைத்து பணியை மேற்கொண்டு இருந்தால் குழந்தையின் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
மேலும் இப்பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திறந்தவெளியில் காலைக்கடன் செல்வதால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu