தமிழகத்திலுள்ள மது ஆலைகளை 60% திமுகவினர்தான் நடத்துகின்றனர்: அன்புமணி ராமதாஸ்
பாமக வேட்பாளர் சத்ரிய சேகருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் இருக்கக்கூடிய மது ஆலைகளை 60% திமுகவை சேர்ந்தவர்கள் தான் நடத்தி வருகின்றனர் என சேலத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சேலம் மாநகராட்சி 3 ஆவது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சத்ரிய சேகருக்கு ஆதரவு தெரிவித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குரங்கு சாவடி பகுதியில் உள்ள மளிகை கடை, தேநீர் கடை, மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் மேலும் அவர் கூறியதாவது: சேலம் என்றாலே மாம்பழம் தான். அப்படிப்பட்ட சேலம் மாநகராட்சியில் சாக்கடைகளாக உள்ளது. 40 ஆண்டுகளுக்கும் முன்பாக பார்த்த சாக்கடைகள் இன்றுவரை அப்படியேதான் உள்ளது. சேலத்தில் நடுப்பகுதியில் திருமணிமுத்தாறு இருந்தது. அந்த ஆற்றில் தான் தண்ணீர் குடித்தார்கள். கோவிலில் பூஜை நடத்தினார்கள்..ஆனால் இன்று அது சாக்கடையாக சென்று கொண்டிருக்கிறது.
50 ஆண்டுகாலம் இந்த தமிழகத்தை ஆண்ட இரண்டு கட்சிகளாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. 2 மேம்பாலங்கள் மட்டுமே சேலத்தில் உள்ளது. அதுவும் சேலம் நகரத்துக்குள் மட்டும் தான் உள்ளன. அந்த இரண்டு மேம்பாலங்கள் இன்னும் 15 வருடங்களில் இடிக்க வேண்டிய சூழல் வரும். அந்த இரண்டு மேம்பாலங்கள் தான் போக்குவரத்து நெரிசலில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். திட்டமிட தெரியாத இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற சூழல் தான் இதற்கு காரணம்.
நீட் தேர்வால் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இறந்துள்ளனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய மது ஆலைகளை 60% திமுகவை சேர்ந்தவர்கள் தான் நடத்தி வருகின்றனர். முதல்வரான பிறகு முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று சொன்னவர் இந்த ஐந்தாண்டு காலத்தில் என்ன மாறி இருக்கிறது என்றார். உயர்நீதிமன்றம் மது பார்களை ஆறுமாதத்தில் மூட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ் ஆறு மாதம் வரை காத்திருக்கக் கூடாது உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், படிப்படியாக மதுபான கடைகளையும் மூட வேண்டும். .தமிழகத்தில் கடன் தொகை 15 லட்சம் கோடி ஆனால் வருவாயில் மதுவின் மூலம் வரும் வருவாய் மட்டும் 33% உள்ளது என்றார்.
தேர்தல் ஆணையம் என்பது திமுகவின் ஒரு அங்கம் என்று விமர்சித்த அவர், சில இடங்களில் பரிசுப் பொருள்கள் குறித்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் மட்டுமே இதுபோன்று நடக்கிறது. இந்த கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu