சேலம் அருகே போலீசார் மீது விசிக.,வினர் கல்வீசி தாக்குதல்: தடியடி, பதற்றம்

கே.மோரூர் பகுதியில் அனுமதியின்றி கொடிகம்பம் நட வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.
சேலம்-தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ளது கே.மோரூர் பகுதி. இந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பம் நடுவதற்கும், கடந்த 17ஆம் தேதி சேலம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கொடி ஏற்றுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் ஏற்கனவே அங்கு திமுக, அதிமுக கொடி கம்பங்கள் இருப்பதால் இடையூறு ஏற்படுவதால் இனி அப்பகுதியில் கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது காவல் துறைக்கும், வருவாய் துறைக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை நடுவதற்கு காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். மேலும் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் அன்றைய தினம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் கே.மோரூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் தடையை மீறி கொடிக்கம்பம் நடுவதற்கு முயற்சித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தடுத்துள்ளனர். அப்போது காவல்துறையினருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து கொடிக்கம்பத்தை காவல்துறையினர் பிடுங்கி சென்றனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையினரை கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியதால் போர்க்களம் போல மாறியது. அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முகாமிட்டுள்ளார். தடையை மீறி கொடிக் கம்பம் நடும் விவகாரத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சனையால் கே. மோரூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu