காவல்துறைக்கு பாதுகாப்பாக இராணுவத்தை அழைக்கும் நிலை உள்ளது : எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

காவல்துறைக்கு பாதுகாப்பாக இராணுவத்தை அழைக்கும் நிலை உள்ளது : எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
X
காவல்துறைக்கு பாதுகாப்பாக இராணுவத்தை அழைக்கும் நிலைதான் தற்போது தமிழகத்தில் உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

காவல்துறைக்கு பாதுகாப்பாக இராணுவத்தை அழைக்கும் நிலைதான் தற்போது தமிழகத்தில் உள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து, வேட்பாளர்களுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி கோவை மற்றும் சென்னையில் திமுகவினர் ரவுடிகளையும் குண்டர்களையும் வைத்து அதிக அளவில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து ஏற்கனவே அரசுக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த அவர், திமுகவினர் தோல்வி பயத்தில் கள்ள ஓட்டுகளை அதிகளவில் பதிவு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் ஒரு சில இடங்களில் நிகழ்ந்த திமுகவினரின் அராஜகத்தை வீடியோவாக வெளியிட்டு பேசிய அவர் தமிழகத்தில் அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்கும் சூழல் இல்லாத நிலையே திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் காவல்துறைக்கு பாதுகாப்பாக இராணுவத்தை அழைக்கும் நிலைதான் தற்போது தமிழகத்தில் உள்ளதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதுதான் காரணம் எனவும் அச்சத்தில் தான் மக்கள் வாக்களிக்க வரவில்லை எனவும் சாடினார்.

தொடர்ந்து நடைபெற உள்ள வாக்கு எண்ணும் பணியில் அதிகாரிகள் ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்ட அவர் காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருந்து வாக்கு எண்ணும் பணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
ai and future cities