வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் கொடுத்து கௌரவிப்பு
வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு வழங்கப்பட்ட மை ஸ்டாம்ப்.
பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் இரண்டாவது முறையாக தமிழக வீரர் மாரியப்பன் பதக்கம் வென்றார். இந்தியா திரும்பிய மாரியப்பன் தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர், பிரதமர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் பலர் அவருக்கு தொடர்ந்து தொலைபேசி, சமூக வலைதளம் போன்றவை மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய தபால் துறையில் உள்ள இ - போஸ்ட் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் இருந்து 510 இ-போஸ்ட்டுகள் அஞ்சல் துறை மூலம் மாரியப்பனுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்து உள்ள பெரியவடகம்பட்டி மாரியப்பன் இல்லத்தில் மாரியப்பனை நேரில் சந்தித்த அஞ்சல் துறையினர் இ-போஸ்டுகளை மாரியப்பனிடம் வழங்கினர். மேலும் மாரியப்பனிடம் மை ஸ்டாம்ப் கொடுக்கப்பட்டது. இதனை சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அஞ்சல் துறையினர் நேரில் வழங்கி , சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த மை ஸ்டாம்ப் வெளியிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும், அளவிட முடியாத சந்தோஷமாகவும் உள்ளது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்தமுறை மழையின் காரணமாக தங்கப்பதக்கம் பெற முடியவில்லை. அடுத்த முறை கட்டாயம் தங்கப் பதக்கம் வெல்வேன். மேலும் பிரதமர் மோடி அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் பேசிய பின்பு மிகப்பெரிய புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. மேலும் இளைஞர்கள் ஒரு வேலையில் இறங்கினால் நம்மால் முடித்துவிட முடியும் என்ற முழு மனதுடன் இறங்கினால் நிச்சயம் வெற்றி பெறமுடியும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu