திட்டமிட்டு தங்கமணி வீட்டில் ரெய்டு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திட்டமிட்டு தங்கமணி வீட்டில் ரெய்டு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
X

ரெய்டு குறித்து பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி. 

திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு தங்கமணி வீட்டில் ரெய்டு நடத்தியுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான அறுபத்தி ஒன்பது இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில் சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,

திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, உறவினர் வீடுகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சோதனை நடத்துகிறது. நேரடியாக எதிர்க்க திராணியல்லாத திமுக லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவிவிட்டுள்ளது. கழக அமைப்பு தேர்தல் சுறப்பாக, எழுச்சியோடு நடைபெற்று வரும் நிலையில், திமுக அரசு இந்த ரெய்டை நடத்துவது கண்டிக்கத்தக்கது.

அதிமுக வளர்ச்சியை பொறுத்துகொள்ள முடியவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 525 வாக்குறுதிகளை வழங்கினர். அதனை செயல்படுத்த முடியாததால், திசை திருப்ப வழக்கு தொடுக்கின்றனர். குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய், எரிவாயு மாணியம், கல்வி கடன் ரத்து, முதியோர் உதவி தொகை உயர்த்துவது, டீசல் விலை குறைப்பு இவற்றை எல்லாம் நிறைவேற்றவில்லை. டீசல் விலை உயர்வால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

பிற மாநிலங்களில் டீசல் விலை குறைத்த பின்னும் தமிழகத்தில் குறைக்கவில்லை. கனமழை காரணமாக மழைநீரில் சென்னை மூழ்கியது. இவற்றை மறைக்கவே இந்த ரெய்டு. திமுகவால் அரசியல் ரீதியாக எதிர்க்க முடியவில்லை. அதிமுக எந்த வழக்கானாலும் சட்டரீதியாக எதிர்கொள்ளும். அதிமுக வீழ்ந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால் எழுச்சியாக உள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

திமுக ஆட்சியில் இருந்தபோது 13 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு என்ற அவர் கமிஷன், கலெக்‌ஷன், கரப்சன் - தான் திமுகவின் தாரக மந்திரம் என்றார். 6 மாதத்தில் 6 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளனர். 3 நாட்களுக்கு ஒருமுறை குவாரி பர்மிட் வாங்கவேண்டும் என்ற முறை ஜல்லி உற்பத்தியாளர்களை பாதிக்கும் என்றவர் நிர்வாக திறன் இல்லை என்று விமர்சித்தார். தொடர்ந்து வடகிழக்கு பருவமழைக்கு முன்னரே தூர் வாறி இருந்தால் ஸ்டாலின் தொகுதி தண்ணீரில் மூழ்கி இருக்காது.

ஸ்மார்ட் சிட்டியில் அக்டோபர் மாதம் மாம்பழம் பாலம் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் போட்டு பணி தொடங்கியதால் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது.160 பொறியாளர்கள் ஒரே நேரத்தில் மாற்றியதால் புதியதாக வந்தவர்களுக்கு என்ன செய்வது என்று அவர்களுக்கு புரியவில்லை என்றார். பாமக ராமதாஸ் தொடர்ந்து அதிமுக கூட்டணி விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, பாமகவுக்கு என்ன துரோகம் செய்தோம் என்று அவர்கள் கூறவேண்டும். தேர்தல் வரும்போது எல்லாம் மாறுவது அவர்களின் வாடிக்கையாக உள்ளது என்றார்.

வரும் 17ம் தேதி நடைபெறும் அதிமுக ஆர்பாட்டத்தை முடக்குவதற்குதான் இந்த ரெய்டு என்று குற்றம் சாட்டிய அவர், அனைத்து வகையிலும் திமுக தோல்வி அடைந்துவிட்டது. திமுக அரசு மக்களைபற்றி கவலைப்பட வில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களைதான் தற்போது அடிகல் நாட்டுகின்றனர். திறந்து வைக்கின்றனர். திமுக அறிவித்த திட்டங்கள்; சக்கரை என்றால் இணிக்காது, வாயில் போட்டால்தான் இனிக்கும். நாங்கள் சர்க்கரையை உற்பத்தி செய்து வைத்தோம் என்று குறிப்பிட்டார்.

மேலும் 5 சவரன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமார்ந்து போய்விட்டனர். அதிமுக பழங்குடி மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் தந்துள்ளோம். அதிமுக கொண்டுவந்த திட்டங்களை முடக்க பார்க்கின்றனர் என்ற அவர், உதயநிதி துணை முதலமைச்சராக வேண்டும் என்ற பேச்சு குறித்த கேள்விக்கு, காலம்தான் பதில் சொல்லனும். அனுபவம் உள்ள முன்னோடிகள் இருந்தாலும், குடும்ப வாரிசுதான் அந்த கட்சி தலைமைக்கு வரமுடியும். அது அக்கட்சியின் தலைவிதி என்று கடுமையாக விமர்சித்தார். அம்மா சிமெண்ட் என்ற பெயரை வலிமை சிமெண்ட் என்று மாற்றி உள் ளனர். அதையாவது விலை குறைவாக தரவேண்டும் என தெரித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!