வெள்ளி வென்ற மாரியப்பன்: மகிழ்ச்சி கொண்டாடடத்தில் கிராம மக்கள்

வெள்ளி வென்ற மாரியப்பன்: மகிழ்ச்சி கொண்டாடடத்தில் கிராம மக்கள்
X

பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்.

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் ஓமலூர்அருகே உள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் பங்கேற்றார். கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று இருந்ததால் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. பெரியவடகம்பட்டியிலுள்ள அவரது வீட்டில் அவரது தாயார் சரோஜா, தம்பிகள் குமார், கோபி மற்றும் நண்பர்கள் தொலைக்காட்சி நேரலையில் போட்டியை கண்டுகளித்தனர்.

தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப் பதக்கத்தை மாரியப்பன் வென்றார். இதனை நேரில் கண்ணுற்ற அவரது தாயார் சரோஜா மற்றும் உறவினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவருடைய சகோதரர்களும், நண்பர்களும் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். தங்கம் வெல்வார்என்று பெரிதும் எதிர்பார்த்து இருந்ததாகவும், வெள்ளி வென்றதும் மகிழ்ச்சிதான் என்றும், நாட்டிற்காக மீண்டும் ஒரு முறை தன்னுடைய மகன் பதக்கம் வென்றது மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக தாய் சரோஜா தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றிருப்பது பெரியவடகம்பட்டி கிராம மக்களையும் அவரது நண்பர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து பட்டாசு வெடித்து ஒருவருக்கு ஒருவர் இனிப்பு பரிமாறிக் கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!