போலீசாரை கண்டித்து ஓமலூர் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓமலூர் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தினர்.
சேலம் மாவட்டம், ஓமலூரிலுள்ள நெடுஞ்சாலைதுறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 25க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், சாலைப்பணியாளர்கள் அன்பழகன், செல்வராஜ், சின்னப்பன், முனுசாமி ஆகிய நான்கு பேரும் கடந்த 8-ம் தேதியன்று, கருப்பூர் காவல் நிலைய எல்லையில் உள்ள வெங்காயனூர் பகுதி வழியாக செல்லும் சாலை ஓரம் இருந்த முட்புதர்களை இயந்திரத்தைக்கொண்டு வெட்டி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அந்த இயந்திரத்திலிருந்து ஏதோ ஒரு கல் தெறித்து வெளியேறி, அங்கே சாலையோர தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நடராஜன் என்பவரது வயிற்றுப்பகுதியில் பட்டுள்ளது. ஆனால் நடராஜன், அதை அப்போது கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.
இதனையடுத்து அவர் கடந்த 12-ம் தேதி சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்ததில், வயிற்றுப்பகுதியில் பலத்த அடிபட்டு இருந்ததும், பின்னர் அவர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு நான்கு வழிச் சாலை பணியாளர்களுக்கு கருப்பூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, இறந்தவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனரிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர் நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில், கருப்பூர் காவல்துறையினர் வேண்டுமென்றே, முகாந்திரம் இல்லாத புகாரில், சாலை பணியாளர்களை விசாரணைக்கு அழைத்து மன உளைச்சலை ஏற்படுத்துவதாகக் கூறி, ஓமலூர் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பூர் காவல் நிலைய போலீசாரையும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளையும் கண்டித்து முழக்கமிட்டனர்.
தொடர்ந்து சாலை பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் அம்சராஜ் கூறும்போது, ஓமலூர் கோட்டத்தில் பணியாற்றி வரும் நான்கு சாலை பணியாளர்கள் மீது ஏதோ உள்நோக்கம் கொண்டு கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய முயற்சிப்பதாகவும், இதற்காக ஓமலூர் உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் உடந்தையாக செயல்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.
மேலும், தமிழக அரசு உடனடியாக இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu