நாட்டுக் கோழியும், ஆட்டுக்கால் சூப்பும் வெற்றியின் ரகசியம்: பாரா ஒலிம்பிக் மாரியப்பன்
பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய மாரியப்பனின் தாய்.
மாற்று திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இம்மாதம் 24 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் துவங்குகிறது. இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று கலந்துரையாடினார். அதன்படி இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரரான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறிப்பாக மாரியப்பன் தாயார் சரோஜா, சகோதர்கள் குமார், கோபி ஆகியோருடன் காணொளி மூலமாக கலந்துரையாடினார்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவடுகம்பட்டியில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் மாரியப்பன் தாயார், சகோதரர்களிடம் காணொளி மூலமாக உரையாடிய பிரதமர் மோடி, மாரியப்பன் முன்னேற தங்களின் பங்கு குறித்தும் உணவு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதற்கு பதில் அளித்த மாரியப்பன் தாயார் சரோஜா, ஒலிம்பிக் போட்டியில் இந்த முறையும் நிச்சயம் தங்கம் வெல்வான் என தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாக தெரிவித்ததோடு, மாரியப்பனுக்கு நாட்டு கோழியும், ஆட்டுக்கால் சூப்பும் தருவதாக தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த மோடி, நாட்டிற்கு நல்ல மகனை தந்ததற்கு நன்றியை தெரிவித்து கொண்டார். மாரியப்பன் சகோதரர்களிடம் பேசிய மோடி, மாரியப்பன் செயல்பாடுகள் குறித்தும் கேட்டிருந்ததோடு, மாரியப்பன் வருங்காலத்தில் நிகழ்த்தும் பல்வேறு சாதனைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். முன்னதாக மாரியப்பன் குடும்பத்தினரை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி உரையாடிய தமிழக வீரர் மாரியப்பன் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் முதல் இடம் பிடித்து நாட்டிற்காக தங்க பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu