திமுக முறைகேடுகள் தொடர்ந்தால் சட்டமன்றம் முடக்கம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

திமுக முறைகேடுகள் தொடர்ந்தால் சட்டமன்றம் முடக்கம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
X

ஓமலூரில் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி.

திமுக முறைகேடுகள் தொடர்ந்தால் மேற்குவங்கத்தை போல சட்டமன்றம் முடக்கும் நிலை ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 55,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஓமலூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என நிரூபித்துள்ளோம். இந்த நிலை , வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தொடர வேண்டும். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் அடிக்கடி சட்டத்தை மாற்றி வருகிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும் எதிர்கட்சிகளுக்கு பாதகமாகவும் அடிக்கடி நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் மாற்றிக் கொள்கிறது.

தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு அது நடுநிலையோடு செயல்பட வேண்டும். அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டது. மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் வெற்றி பெற்றார்கள். மக்கள் தீர்ப்பை தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்படுத்தியது.

ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைக்கூலியாக மாறிவிட்டது. பல இடங்களில் எதிர்க்கட்சியினருக்கு பாதகமாக ஆளுங்கட்சியினர் சாதகமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால்தான் மேதகு ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

உயர்நீதிமன்றத்தில் தேர்தலை நடுநிலையோடு நேர்மையுடன் நடத்துவோம் என தேர்தல் ஆணையம் வாக்குறுதியளித்துள்ளது. அதனை முழுமையாக நிறைவேற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு தேர்தல் ஆணையம் ஆளாக நேரிடும். தேர்தல் அலுவலர்கள் நடுநிலையோடு முறையாக செயல்பட வேண்டும். இனியும் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அலுவலர்கள் செயல்பட்டால் அதிமுக சட்டரீதியாக அதனை சந்திக்கும் தேர்தல் அலுவலர்கள் நேர்மையாக நடக்காவிட்டால் நாங்கள் நடக்க வைப்போம். அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் திமுகவுக்கு இல்லை.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு கேட்க வரவில்லை மக்களை சந்திக்க தெம்பு திராணி இன்றி முறைகேட்டில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி மீண்டும் வெற்றி பெற திமுகவினர் முயற்சி செய்கிறார்கள். முறைகேடு இன்றி நேர்வழியில் திமுக ஜெயித்ததாக சரித்திரமிலலை.

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தை முடக்கி அந்த மாநிலத்தின் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலும் ஆளுங்கட்சியினர் தொடர் முறைகேட்டில் ஈடுபட்டால் தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கும் நிலை விரைவில் ஏற்படும். தில்லுமுல்லு செய்து வெற்றி பெறலாம் என நினைக்கும் திமுகவின் மக்கள் விரோத போக்கை அதிமுக வேடிக்கை பார்க்காது. ஆளுங்கட்சியின் எந்த அடக்குமுறைக்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று தெரிவித்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களை மறந்து விட்டார்கள். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் மாதம்தோறும் மகளிருக்கு கொடுப்பதாக சொன்ன ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்கவில்லை என பொதுமக்கள் கேட்டதற்கு இன்னும் நான்கு வருடம் இருக்கிறது என உதயநிதி பதிலளித்துள்ளார். இதிலிருந்து அடுத்த நான்கு வருடமும் அந்த திட்டம் செயல்படாது என உறுதி ஆகிவிட்டது.

தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இன்னும் இருபத்தி ஏழு மாதம் தான் திமுக ஆட்சியில் இருக்கும் திமுக செல்வாக்கு சரிந்துவிட்டது. ஆட்சிக்கு வந்த ஒன்பது மாத காலத்தில் எந்த கட்சிக்கும் இப்படி நேர்ந்ததில்லை தமிழகத்தில் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடக்கும்போது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் திறமையற்ற முதலமைச்சர் செயலிழந்து அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. தற்போதைய திமுக அரசால் திமுக குடும்பத்தினர் மட்டுமே பலமாக இருக்கின்றனர்.

திமுகவின் வாக்குறுதியை நம்பி நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்ற 35 லட்சம் பேர் திமுகவிற்கு வாக்களித்ததற்கு அபராதமாக வட்டி கட்டி வருகிறார்கள் மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள். பொங்கல் தொகுப்பு கொடுப்பதாக கூறி பொங்கல் பழிவாங்கியது. கரும்புகளை விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பெற்று அதிக விலைக்கு கொள்முதல் செய்ததாக காட்டியது என 500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!