சேகர் ரெட்டி பணம் கொடுத்ததாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
சேகர் ரெட்டி பணம் கொடுத்ததாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, தொடர்பாக எந்த ஒரு நோட்டீஸும் வரவில்லை என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.
சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது. ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்னும் திட்டமிடப்படவில்லை. 9 மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் அரசியல் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. எந்த ஆட்சியாக இருந்தாலும் வங்கியில் முறைகேடு நடந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அனைத்திலும் முறைகேடு நடைபெற்றதாக தெரியவில்லை.திமுக, தனது தேர்தல் அறிக்கையை என்றைக்கும் நிறைவேற்றியதாக வரலாறு இல்லை. முதல் கையெழுத்து நீட் ரத்து செய்வேன் என்று கூறிய ஸ்டாலின் அதை செய்யவில்லை. நாங்கள் போட்ட தீர்மானத்தையே அவர்களும் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர். நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையை நம்பி 43 லட்சம் பேர் காத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது கூட்டுறவு வங்கி நகைக்கடன் மட்டும் ரத்து என்றும், அதற்கும் கட்டுபாடுகள் கூறுகின்றனர்.
2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்த்தில் ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்படுகிறது. எனவே எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் 8 பேர் மட்டுமே மருத்துவகல்வி பயின்ற நிலையில், அதிமுக ஆட்சியில் 7.5 சத இட ஒதுக்கீடு அளித்ததால் 435 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே முறையை திமுக அரசும் பின்பற்றி இருக்கிறது. திமுகவில் 13 பேர் மீது சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் போதும், இப்போதும் அதிமுகவை மட்டுமே குறிவைத்து செய்திகள் வெளியிடப்படுகின்றன.
மக்கள் பிரச்னையை எடுத்துச் சொன்னால் யாரும் வெளியிடுவதில்லை. ஒரு லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யாமல் தேங்கி கிடக்கின்றன. மழையில் நனைந்து வீணாகின்றன. ஆட்சிப் பொறுப்பேற்று 4 மாதங்களாகி விட்டது. மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யாமல் அதிமுக மீது புழுதி வாரி தூற்றுவதையும், அவதூறு பரப்புவதையே திமுக அரசு செய்து வருகிறது.சேகர் ரெட்டி பணம் கொடுத்ததாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அது தொடர்பாக எந்த ஒரு நோட்டீஸும் வரவில்லை என்றார் எடப்பாடி கே. பழனிசாமி .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu