நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை: எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை: எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
X

தற்கொலை செய்துகொண்ட மாணவனின் தந்தைக்கு ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி.

சேலத்தில் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ்(19). இவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத ஆயத்தமாகி வந்தார். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை இன்று எழுத இருந்த தனுஷ் தேர்வு பயத்தில் அதிகாலை தனது வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்கிற அச்சத்தில் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு பயத்தில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் உடலுக்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது மாணவரின் தந்தையிடம் தங்கள் மகன் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்து விட்டார். தைரியமாக தேர்வை எழுதி இருக்கலாம் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!