10 மாதங்களுக்குப்பின் 100 அடியை எட்டிய மேட்டூர் அணை: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

10 மாதங்களுக்குப்பின் 100 அடியை எட்டிய மேட்டூர் அணை: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
X

மேட்டூர் அணை.

10 மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டு துவக்கத்திலேயே அதாவது ஜனவரி 1.1. 2021 தேதி 105.28 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 1057 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால் நீர்மட்டம் சரிந்து. 28.3 2021 இல் 100 அடிக்கு கீழ் குறைந்தது. அன்று முதல் நீர்மட்டம் இறங்கு முகத்தில் சென்றது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்தது. 2020ஆம் ஆண்டில் அணையின் நீர்மட்டம் 4 முறை 100 அடியை எட்டிய நிலையில், நடப்பாண்டில் ஒருமுறைகூட 100 அடியை எட்டாததால் விவசாயிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர் .

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அக்டோபர் 4ஆம் தேதி 74.42 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக அதிகரித்து கடந்த 21 ஆம் தேதி 94.20 அடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் 13, 477 கன அடியாக இருந்த நீர்வரத்து நீர்த்தேக்க பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 39,616 கன அடியாக நீர்வரத்து இருந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி வீதமும் கால்வாய் பாசனத்திற்கு 550 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை விட திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 97.80 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 2.70 அடி உயர்ந்தது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி 99.68 அடியாக நீர்மட்டம் இருந்தது.

இதையடுத்து தொடர்ந்து மேட்டூருக்கு நீர் வரத்து 28,650 கன அடியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை 11.10 மணியளவில் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. இதனால் 10 மாதங்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டியுள்ளது. மேலும் மேட்டூர் அணை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் டெல்டா விவசாயிகளும், மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!