மேட்டூர் அணை நள்ளிரவில் திறப்பு: டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை நள்ளிரவில் திறப்பு: டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர்.

மேட்டூர் அணை 120 அடியை எட்டியதால் நள்ளிரவில் திறக்கப்பட்டது. டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி. மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி.,யாகும். காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன்12 முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அன்றைய தினம் அணையின் நீர் மட்டம் 96.81 அடியாகவும், நீர் இருப்பு 60.78 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வந்ததால், கடந்த மாதம் 13 -ம் தேதி முதல் பாசன நீர் திறப்பு வினாடிக்கு 100 அடியாக குறைக்கப்பட்டது. நீர் வரத்தைக் காட்டிலும் நீர் திறப்பு குறைக்கப் பட்டதால் கடந்த 24.10.2021 அன்று அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது. அணை 100 அடியை எட்டுவது அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 65 வது முறையாகும்.

இந்நிலையில் கர்நாடக அணைகளான கபினி ,கே.ஆர்.எஸ். அணைகள் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் அவ்வணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த உபரி நீர் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை நீர் அனைத்தும் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டுள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த 9 -ஆம் தேதியன்று 119 அடியாக உயர்ந்தது. அணை நிரம்பும் தருவாயில் நீர்வரத்து அதிகளவு வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி நீர் திறப்பு வினாடிக்கு 100 கன அடியிலிருந்து 20,000 கன அடியாகவும், படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

நீர் திறப்பு அதிகரிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப் பட்டது. மேலும் கரையோர பகுதிகளில் தண்டோரா மூலம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறும்,மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதித்தும் எச்சரிக்கப் பட்டனர். இதையடுத்து நீர் வரத்து அதிகரிப்பை முன்னிட்டு அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 11.35 மணிக்கு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டியதையடுத்து அணையின் 16 கண் உபரி நீர் போக்கி அருகில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பூஜை செய்தனர். இதில் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தேவராஜன், உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியம், உதவி பொறியாளர் அணை பிரிவு மது சூதனன் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போது அணை 120 அடியை எட்டி நிரம்புவது மேட்டூர் அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 41 -வது முறையாகும்.

இதனைத் தொடர்ந்து காவிரி டெல்டா 12 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25,150 கன அடி நீர் வந்துக் கொண்டுள்ளது.16 கண் உபரி நீர் போக்கியில் வினாடிக்கு 2,500 கன அடியும், மின்நிலையங்கள் வழியாக 22,500 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 150 கன அடியும் வெளியேற்றப் பட்டு வருகிறது. நீர் திறப்பைக் கொண்டு அணை, சுரங்க, நீர் தேக்க மின்நிலையங்களில் 286 மெகா வாட் மின்னுற்பத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story