உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை படைக்கும்: மேட்டூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

இந்த ஆண்டு, நிர்ணயிக்கப்பட்ட சாகுபடியை தாண்டி உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை படைக்கும் என, மேட்டூரில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை , முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மேட்டூர் அணை கட்டப்பட்ட நாளில் இருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதம் 12ஆம் தேதி 18 ஆவது .முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2001-2002ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ளது. ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து விடுவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக, திருச்சி கூட்டத்தில் ஏழு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. அதில் மிக முக்கியமானதாக மேலாண்மையும் நீர்வளமும் ஒன்று. இந்த இலக்குகளை 10 ஆண்டு காலத்தில் அடைவோம். அதற்கான திட்டமிடுதல் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிகர பயிரிடு பரப்பளவு 60 விழுக்காடாக உள்ளது. இதை எழுபத்தைந்து விழுக்காடாக 10 ஆண்டுக்குள் அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவிரி தண்ணீர் கடைமடை பகுதி வரை போய்ச்சேருவதை கண்காணிக்க அரசு உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நான் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். தமிழகத்துக்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சருக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

விவசாயிகளுக்கு உதவும் வகையில் விதைகள் உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. குறுவை சாகுபடிக்கான பணிகளை துவங்கிட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட வேளாண் துறை மற்றும் கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டு, நிர்ணயிக்கப்பட்ட சாகுபடியை தாண்டி, உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை படைக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்தபோது தினசரி தொற்று 36 ஆயிரத்தை கடந்து இருந்தது. தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை தொடும் என்ற சூழல் அப்போது இருந்தது. எனவே, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இப்போது தொற்று படிப்படியாக குறைந்து நேற்றைய தினம் தொற்று பாதிப்பு 16 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தது. ஆட்சிக்கு வந்தபோது படுக்கை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் இருந்தன. தற்போது இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்